இலங்கையில், தென் மாகாணத்தில் ஹம்பாந்தோட்டை “வெறும் வறுமையும் வரட்சியும் கொண்ட பிரதேசம்” என்ற கருத்தியலை மாற்றியமைக்கத்தக்க வகையில், நிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது சர்வதேச துறைமுகம் என்ற பெருமைக்குரிய இலங்கை ஹம்பாந்தோட்டை ‘மாகம்புர’ துறைமுகத்திற்கு நீர் நிரப்பும் முக்கிய நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் ஆகஸ்ட் 15. 2010 இல் திறந்துவைக்கப்பட்டது . இத்துறைமுகம் ‘தெற்காசியாவின் ஆழமான துறைமுகம்’ எனவும் கருதப்படுகிறது.
ஹம்பாந்தோட்டை ‘கரசன்லேவாய’களப்பின் ஒரு பகுதியைச் சுழ அணைகள் அமைத்து அதனை ஆழமாக்கி 21 மீற்றர் உயரத்தினை கொண்ட இரண்டு இறங்குதுறைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இதன் முதலாவது கட்டத்தின் கீழ் கிழக்கிலிருந்து மேற்காக 14 கிலோ மீற்றர்களைக் கொண்ட இரு அலை தாங்கிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இப்பகுதி கப்பல்கள் மூலம் ஆழமாக்கப்பட்டு அங்கிருந்து புதிய துறைமுகத்துக்குள் தண்ணீர் நிரப்பப்பகிடுகின்றன.இத்துறைமுக முதல்கட்ட நிர்மாணப்பணிகள் 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி சீனக் கப்பல் பொருளியல் கூட்டுத்தாபனத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டது. 39 மாதத்தில் நிறைவு செய்யப்படவிருந்த இத்திட்டம் இலங்கை துறைமுக அதிகார சபையின் உள்ளுர் பொருளியலாளர்களின் ஒத்துழைப்புடன் 30 மாதங்களில் பூர்த்தி செய்யப்பட்டது. எதிர்வரும் நவம்பர் மாதம் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை முதல் கப்பல் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் நிர்மாணப்பணிகளுக்காக சீன எக்ஸிம் வங்கி 85 சதவீத நிதியை இலங்கைக்கு வழங்கியது. மிகுதி 15 சதவீத நிதியை இலங்கை துறைமுக அதிகார சபை வழங்கியிருந்தது. மொத்தம் 360 மில்லியன் அமெரிக்க டொலர் முதலாவது கட்டப் பணிகளுக்கு செலவிடப்பட்டுள்ளது. இரண்டாவது கட்ட நிர்மாணப்பணிகளுக்கு உதவ சீன அரசாங்கம் முன்வந்துள்ளதோடு நவம்பர் மாதம் முதல்கட்டம் நிறைவுபெறும் போது இரண்டாம்கட்ட நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
சர்வதேச துறைமுக கப்பல் பாதைக்கு ஆறு கிலோ மீற்றர் தூரத்தில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. துபாய் மற்றும் சிங்கப்பூர் துறைமுகங்களைப் போல இத்துறை முகத்தை வரிகளற்ற ஒரு தொழில் நுட்ப துறைமுகமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் அரசிடம் உள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம் டென்மார்க் ரெம்போல் கம்பனியின் வளப்பங்களிப்புடன் 2005 ஆம் ஆண்டில் அடிப்படை திட்டம் தயாரிக்கப்பட்டது. திட்டத்தின் நில அளவு 2000 ஹெக்டயார்
உலக கடற் போக்குவரத்துத் துறையினை விரிவாக ஆராயும் போது ஏறக்குறைய 34,000 வெளிநாட்டுக் கப்பல்கள் இலங்கை நாட்டை சுற்றிச் செல்வதை நாம் காண்கின்றோம். எமது கண்தூரத்திற்கு அருகாமையில் எமது நாட்டை தவிர்ந்து செல்லும் இக்கப்பல்களில் ஏறக்குறைய 10,000 கப்பல்கள் மட்டுமே கொழும்புத் துறைமுகத்தை வந்தடைகின்றன.
ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் திறக்கப்பட்டதும் பெரும்பாலான கப்பல்கள் இத்துறைமுகத்தை அண்மித்தே தமது பயணத்தை மேற்கொள்ளும். அப்போது இக்கப்பல்கள் இத்துறைமுகத்தை வந்து அடைவது இலகுவானதும் தவிர்க்கமுடியாததுமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments:
Post a Comment